

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை தற்போது இல்லை என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், இன்று (ஜூன் 02) சென்னை தலைமைச் செயலகத்தில், சென்னை தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள் சார்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 72 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"செங்கல்பட்டில் மத்திய அரசால் தடுப்பூசி தயாரிக்க ரூ.700 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் உள்ளது. அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியாக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக, தமிழகத் தொழில் துறை அமைச்சரை புதுடெல்லிக்கு அனுப்பி தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களைச் சந்தித்து விரைந்து அந்நிறுவனத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுக்கச் செய்தார்.
தொடர்ந்து, தமிழக அரசின் சார்பாக மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று மத்திய அரசே விரைந்து அந்நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் அல்லது மாநில அரசுக்கு உற்பத்தியைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற நிலை தற்போது இல்லை. ரூர்கேலா, ஜாம்ஷெட்பூர் போன்ற வெளிமாநில நகரங்களில் இருந்து ஆக்சிஜன் பெறப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி ஆக்சிஜன் கையிருப்பு 230 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 660 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. எனவே, பொதுமக்களுக்கு கரோனா குறித்த அச்சம் தேவையில்லை".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.