Published : 02 Jun 2021 02:06 PM
Last Updated : 02 Jun 2021 02:06 PM

தடுப்பூசி மையத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்: மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போன்று தமிழகத்துக்குத் தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''முதல்வர் ஸ்டாலின் முயற்சியால், தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி பயன்பாடு பெருமளவு உயர்ந்துள்ள நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டு சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்குப் போதிய தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரது கடிதம்:

“செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கடந்த வாரம் பிரதம மந்திரிக்கு நான் கடிதம் எழுதினேன். மாநில அரசின் கீழ் இயக்குவது அல்லது மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து ஆலோசித்து அதை நடத்த ஒரு நிறுவனத்தின் கீழ் அனுமதி அளிப்பது எனக் கேட்டிருந்தோம். ஆனால், தற்போது மத்திய அரசே குறிப்பிட்ட நிறுவனம் மூலம் தானே இயக்குவதற்கு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தடுப்பூசி அவசரத் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கீழோ, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழோ உடனடியாகத் தடுப்பூசி மையத்தை இயக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் தேசிய சொத்தான தடுப்பூசி மையத்தை முழு உபயோகத்துக்குக் கொண்டுவர நாங்கள் பரிபூரண ஆதரவை அளிக்கத் தயாராக இருக்கிறோம்.

கடந்த ஒரு மாதத்தில் தமிழக அரசு மக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த கடிதத்தில் மக்கள்தொகை அளவுக்கேற்ப தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

அரசு மற்றும் அரசு சாரா முறையில் இறக்குமதி மூலம் மாதம் 50 லட்சம் டோஸ் கிடைக்கப்பெற வேண்டும், ஆனால், தற்போதைய நிலவரப்படி வெளியிலிருந்து 25.84 டோஸ்களும், அரசு மூலம் 16.74 லட்சம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவை அதிகரித்து அளிக்க வேண்டும். தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரம் ஒதுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கிட வேண்டும். தமிழ்நாடு போன்று மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுவது போன்று தமிழகத்துக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் தடுப்பூசி இருப்பு குறைந்துகொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் அளவுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக ஜூன் மாதத்துக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க வேண்டும். இது தடுப்பூசி இயக்கத்தை ஊக்கப்படுத்த உதவும். இதை அளிப்பதன் மூலம் அடுத்து வரும் வாரங்களுக்கு தடுப்பூசி இயக்கத்தை எங்களால் விரைவுபடுத்த முடியும்.

இதைத் தாங்கள் தனிக்கவனமாக எடுத்து, இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x