

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை சென்னை வந்தார் வெங்கய்ய நாயுடு. அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் நிருபர்களிடம் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
கனமழை, வெள்ளத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி பார்வையிட்டு முதல்கட்ட உதவியை வழங்கியுள்ளார். முப்படைகள், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை மீட்பு, நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டன.
நிவாரணப் பணிகளில் தமிழக அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம், நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்த இருக்கிறேன்.
சரக்கு, சேவை வரி, நில வணிகம் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அவர்கள் சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தை முடக்குவதை புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அரசுக்கு யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை. தங்கள் மீதான தவறுகளை மறைக்க வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோட்டூர்புரம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பாதித்த மக்களை வெங்கய்ய நாயுடு இன்று சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்களை வழங்குகிறார்.