

கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கை நீட்டிப்பதா? என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்நிலையில், 22-5-2021 அன்று சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் நடத்திய ஆலோசனைக் கூட்ட அடிப்படையில், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்து, கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர் நோய்த்தொற்றின் தன்மை மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுக்க முழு ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு ஜூன் 7 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
தமிழகத்தில் 36,000 என்கிற நிலையில் உச்சம் தொட்ட தொற்று எண்ணிக்கை, ஊரடங்கு காரணமாக குறைந்து 25,000க்கும் கீழ் வந்தது. சென்னையில் 6,500க்கு மேல் இருந்த தொற்று எண்ணிக்கை 2,450 என்கிற எண்ணிக்கையில் குறைந்தது. ஆனாலும், மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிப்பதா? அல்லது தளர்வுகளுடன் அமல்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பது குறித்து முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னர் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி நிலவரம் குறித்து தனது துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கு காரணமாக நடந்துள்ள நிகழ்வுகள், கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம், மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் உள்ளது, தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசி போடுவதை அதிகரித்தல், பொதுமக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தற்போது ஊரடங்கினால் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் அது பெருமளவில் குறையாத நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்வுகளை அதிகப்படுத்தி நீட்டிப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.