Published : 02 Jun 2021 11:08 AM
Last Updated : 02 Jun 2021 11:08 AM

பிளஸ் 2 தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே: மாநில அரசு நடத்த வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது, அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, அந்த அடிப்படையில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“மத்திய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், பிளஸ் 2 தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம், மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை எடுத்து இருப்பதாக விளக்கம் அளித்து இருக்கின்றார்,

ஆனால், நீட் தேர்வு கிடையாது என அறிவிக்கவில்லை, இந்த ஆண்டும் நடத்தப் போகின்றார்கள். அப்படியானால், அந்தத் தேர்வு எழுதுகின்ற அந்த மாணவர்களின் உடல்நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லையா? அவர்கள் மனஅழுத்தங்களால் பாதிக்கப்பட மாட்டார்களா?அவர்களை மட்டும் கரோனா தொற்று தாக்காமல், விதிவிலக்கு அளிக்குமா?

எனவே, இது ஒரு சூழ்ச்சித் திட்டமே ஆகும். காரணம், அவர்கள் ஏற்கனவே கொண்டு வந்து திணித்து இருக்கின்ற புதிய கல்விக்கொள்கையின்படி, கல்லூரிகளில் சேருவதற்கு, மேனிலைப்பள்ளித் தேர்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது தேசிய தேர்வு முகமை நடத்தும் திறன் அறித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் சேர்க்கை என்று கூறி இருக்கின்றார்கள்.

எனவே, இந்த ஆண்டு மட்டும் அல்ல, இனி எப்போதுமே பிளஸ் 2 தேர்வு நடத்த வேண்டிய தேவை இல்லை என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகும். ஆனால், மாநில அரசுகளின் பாடத்திட்டங்களைப் பொறுத்தமட்டில், மேனிலைப் பள்ளித் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான், கல்லூரிச் சேர்க்கை நடைபெறுகின்றது. அயல்நாடுகளின் பள்ளி, கல்லூரிச் சேர்க்கைக்கும் அந்த மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள் பெறுவதற்கும் அதுவே தகுதியாக இருக்கின்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும்; நீட் தேர்வு கூடாது என்பதுதான், தமிழ்நாட்டின் கருத்து ஆகும். எனவே, ஒன்றிய அரசின் சூழ்ச்சிக்கு அடிபணியாமல், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

கரோனா தொற்றின் வேகம் குறைந்த பிறகு, ஒருமாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளித் தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாட்டில் வலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பு உள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடையாமல், தங்களின் பயிற்சிகளைத் தொடருகின்ற வகையில், மேனிலைப் பள்ளித் தேர்வு நடக்கும் என்ற தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்”.

இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x