அதிமுக ஆட்சியின்போது போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

அதிமுக ஆட்சியின்போது போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம், இணையவழியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி

கிராமங்களில் மருத்துவ சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, முகக்கவசம், கபசுரக் குடிநீர் போன்றவற்றை ஊராட்சி அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனிநிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஊரடங்கால் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உற்பத்தியாகும் மொத்த பாலையும் ஆவின் மூலம் கொள்முதல் செய்யஉத்தரவிட வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு பால் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள மலர் சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வாழைத்தார்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், எட்டு வழிச் சாலை, விளைநிலங்களில் உயரழுத்த மின்கோபுரம், எரிவாயு குழாய், பெட்ரோலிய குழாய் பதிப்பது, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பது ஆகியவற்றை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in