Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

ஆவின் பால் விலை குறைப்பால் 2 லட்சம் லிட்டர் கூடுதலாக விற்பனை: பால்வளத் துறை அமைச்சர் நாசர் தகவல்

பால் விலை குறைக்கப்பட்டதால் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் பால் விற்பனை 2 லட்சம் லிட்டர் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்டசெய்திக்குறிப்பு:

உலக பால் தினம்

கடந்த 2001-ம் ஆண்டில் இருந்துஜூன் 1-ம் தேதி ‘உலக பால் தினமாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில்ஆவின் தலைமை அலுவலகத்தில் உலக பால் தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பாகசெயல்பட்ட பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம்,மொத்த பால் மற்றும் உபபொருட்கள் விற்பனையாளர்கள், சில்லறைவிற்பனையாளர்கள், பால் அட்டை நுகர்வோருக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களை பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர், ஆவின் மேலாண் இயக்குநர் இரா.நந்தகோபால் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் நாசர் பேசியதாவது:

40 லட்சம் லிட்டர் கொள்முதல்

ஆவின், மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வந்தது. கரோனாவை முன்னிட்டு சில தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்திய நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பேரிடர்காலத்திலும் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத வகையில், அவர்களிடம் இருந்து மொத்த பாலையும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு4 லட்சம் லிட்டர் அதிகரித்து 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் தினசரி பால் விற்பனை 24 லட்சம் லிட்டராக இருந்தது. விலை குறைக்கப்பட்ட பின்னர் தற்போது 26 லட்சம் லிட்டர் வரை விற்பனை உயர்ந்துள்ளது. மேலும், புதிய சாதனையாக, கடந்த மே 23-ம் தேதி சென்னையில் 15.04 லட்சம் லிட்டர் மற்றும் பிற மாவட்டங்களில் மே 22-ம் தேதி 12.59 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டது.

நெருக்கடியான சூழலில் மக்களது இல்லத்துக்கே பால் விற்பனைசெய்ய உணவு விநியோக நிறுவனங்களுடன் ஆவின் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தினசரி 700-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் பெறப்பட்டு ரூ.3 லட்சம் மதிப்புள்ள பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x