

சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களின் அணி வகுப்பு நீண்டு கொண்டே சென்றது. பெட்ரோல், டீசல் விநியோகம் பாதிப்படைந்த நிலையில் நகரின் முக்கியமான பெட்ரோல் நிலையங்கள் இயங்கவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமையான இன்று பிரச்சினை முடிவுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடசென்னையில் எண்ணெய் நிறுவன முனையங்களில் வெள்ள நீர் சூழ்ந்து விட்டதும், இங்கிருந்து பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லும் சாலைகள் போக்குவரத்துக்கு உதவிகரமாக இல்லை என்பதாலும், மக்களின் பதற்றமும் ஒன்று சேர பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சில பெட்ரோல் நிலையங்களில் ரேஷன் முறையில் பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 400 பெட்ரோல் நிலையங்களில் 100 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன.
மேலும், ஐடி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள், பிற நிறுவனங்களிலிருந்து ஜெனரேட்டர்களுக்கு டீசல் கேட்டு பெட்ரோல் நிலையங்களுக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
ஆனால், இன்று (சனிக்கிழமை) நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெட்ரோல் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ஒருவரும் பதற்றமடைய வேண்டியதில்லை, பெட்ரோல், டீசல் கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது, திருச்சி மற்றும் பிற ஊர்களிலிருந்து சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பெட்ரோல், டீசல் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்று நம்பத்தகுந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.