

தமிழகத்துக்கு போதிய அளவில் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவில் வழங்கும் என்று தமிழக பாஜக தலைர் எல்.முருகன் தெரிவித்தார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன் முதல் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் நேற்றுநடந்தது. அவரது படத்துக்கு மாநிலதலைவர் எல்.முருகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசின் 7-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக ரத்ததானம் செய்வது, உணவுப் பொருட்கள் வழங்குவது உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம்.
நாட்டில் கரோனா முதல் அலை சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தப்பட்டது. 2-வது அலையும் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பதில் தவறு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
வரும் நவம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குநிர்ணயித்து மத்திய அரசு செயல்படுகிறது. மாநில மக்கள்தொகை, பாதிப்பு சதவீதம், பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தடுப்பூசிகளை மத்தியஅரசு வழங்கி வருகிறது. தடுப்பூசிபோடுவது குறித்து மக்களிடம்சந்தேகத்தை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின்தான். தற்போது விழிப்புணர்வால் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள முன்வருகின்றனர். தமிழகத்துக்கு போதிய அளவில் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும். கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்த மாதம் இரட்டிப்பாக வழங்கப்படும். மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் ஓரிரு நாளில் தமிழகம் வரும்.
திடீரென தொடங்குவதற்கு செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் மெக்கானிக் ஷாப் அல்ல. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த அதை விஞ்ஞானிகளைக் கொண்டு ஆய்வு செய்து, சரியான நேரத்தில் மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வரும். சசிகலா ஆடியோ விவகாரம் அதிமுக உள்கட்சி பிரச்சினை. அதை அவர்கள் சரிசெய்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.