

தமிழகம் முழுவதும் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருப்பு பூஞ்சை பரிசோதனைமேற்கொண்டு சிகிச்சை பெறசென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புறநோயாளிகள்பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றுதொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கருப்பு பூஞ்சை தொடக்க நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு, இங்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அதற்காக, தனி புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு, இங்கேயே தங்கி சிகிச்சை பெற 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்கூட ஏற்கெனவே கருப்புபூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 518 பேர்கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
‘ஸ்டீராய்டு’ மருந்து கொடுக்கப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெரிய அளவில் குறைந்து, கருப்புபூஞ்சை வருவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் ஐரோப்பிய மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் ‘ஸ்டீராய்டு’ தான்கொடுக்கப்படுகிறது. ஆனால் அதன்மூலம் யாருக்கும் கருப்பு பூஞ்சைவரவில்லை என கூறுகின்றனர்.
எது சரி என ஆய்வு மேற்கொள்ள13 மருத்துவ வல்லுநர்கள் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு இன்று (நேற்று) 4 லட்சத்து 26 ஆயிரத்து 570 கோவிஷீல்டு, 75 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. வந்துள்ள தடுப்பூசிகள் அனைத்தும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட உள்ளன. நாளை (இன்று) முதல் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற இருக்கிறது. 42 லட்சம் தடுப்பூசிகள் ஜூன் மாதத்தில் வரவுள்ளது. அதில் 25 லட்சம் தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்தும், மீதமுள்ள தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பணம் கொடுத்து வாங்கப்படுவதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.
இயக்குநர் உத்தரவு
இந்நிலையில், கருப்பு பூஞ்சைபாதிப்பு அதிகரித்து வருவதால் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்என்று மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவ சேவைகள் இயக்குநர், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
கரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பிய அனைத்து நோயாளிகளின் உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். யாருக்காவது கருப்புபூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், உடலுறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள், நீண்ட நாட்கள் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்றவர்களுக்கு கருப்பு பூஞ்சை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, காய்ச்சல், ரத்தம் கலந்த வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால் ரத்தப் பரிசோதனைகளும், பூஞ்சையைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சிகிச்சைகளைத் தொடங்குதல் அவசியம். நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வரும் நோயாளிகளை அதனை உடனடியாக நிறுத்த வைத்தல் வேண்டும்.
முகக் கவசம் அணிந்தால் கருப்பு பூஞ்சை வராமல் காக்க முடியும் என்பதை நோயாளிகளிடம் விளக்கிக் கூற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.