

கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது பிரதமர் நரேந்திர மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியதாகக் கருதப்படுகிறது.
அவர் வந்த நாளில் டெல்லியில் நேரிட்ட விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழந்ததால் முதல்வர் ஜெய லலிதாவின் சந்திப்புகளில் மாற்றம் இருந்ததே தவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு டெல்லி வந்த ஜெயலலிதாவுக்கு முண்டேவின் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாணக்கியபுரியின் புதிய தமிழக இல்லத்துக்கு மதியம் 12 மணிக்கு அவர் வந்தார்.
இதனிடையே கோபிநாத் முண்டேவின் மறைவையொட்டி டெல்லியில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதனால் தமிழக முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. மதியம் சுமார் இரண்டு மணி வரை முதல்வரின் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
அரசு அலுவலகங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம் பத்தில் பறக்கவிடப்பட்ட நிலையில் தமிழக முதல்வர் பிரதமரையும் குடியரசு தலைவரையும் சந்திக்கும் நிகழ்ச்சிகள் கேள்விக்குறியானது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியபோது ‘இதுபோன்ற சமயங் களில் பிரதமரின் அரசு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறாது. அரசு தரப்பு சந்திப்புகளையும் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதை பிரதமரிடம் தெரிவித்த போது வெகுதூரத்தில் இருந்து வந்திருப்பதால் தமிழக முதல்வர், ஓமன் நாட்டு அதிபரின் சந்திப்பு களை மட்டும் ரத்து செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்’ என்று தெரிவித்தனர்.
முண்டேவின் உடல் மகாராஷ் டிராவுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்தச் சந்திப்பை வைக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியதாகவும் அதற்கேற்ப நேரத்தை மட்டும் மாற்றி அமைத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை யிலும் இதேமுறை கடைப்பிடிக்கப் பட்டு அவருடனும் தமிழக முதல்வரின் சந்திப்பு நடந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆட்சியில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இணக்கமான உறவு இல்லை. பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வருக்கு இடையில் நல்லுறவு நிலவுகிறது. அதேபோல் பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவின் வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுவிட்ட பிரசாத், தமிழக முதல்வரை அவர் தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்திலேயே வந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இவரைபோல் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இவர், தமிழக முதல்வரின் சொந்த ஊரான ரங்கத்தைச் சேர்ந்தவர். எனவே நிர்மலாவுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நாளில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவருடைய அலுவலகத்திலேயே தமிழக முதல்வர் சந்தித்தது டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்தமுறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருமுறைகூட தமிழக முதல்வர் சந்தித்தது இல்லை. இருவரிடையே நிலவிய அரசியல் கருத்து வேறுபாடுகளே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்டது. தற்போது ஜேட்லி யுடனான முதல்வரின் சந்திப்பால் தமிழகத்துக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறிய போது, ‘மோடியுடனான நட்பின் காரணமாக ஜேட்லியின் சந்திப்பு முதல்வருக்கு பல நன்மைகளைக் கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பும்படியும் அவருடன் கலந்து ஆலோசித்து அவைகளை அமல்படுத்த வழி செய்வதாகவும் முதல்வரிடம் ஜேட்லி உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தன.
தனது அலுவலகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவை, ஜேட்லி லிப்ட் வரை சென்று வழியனுப்பினார் எனவும், இது தமிழக முதல்வர் மீதான நன்மதிப்பின் அடையாளமே எனவும் அவர்கள் மேலும் கூறினர்.