

ஆந்திர ஆயுர்வேத மருத்துவரின் லேகியத்துக்கு இரண்டே நாளில் அனுமதி வழங்கிய ஆயுஷ் அமைச்சகம், மதுரை சித்த மருத்துவரின் கரோனாவை குணப்படுத்தும் பொடிக்கு ஓராண்டாக அனுமதி வழங்காமல் உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பரம்பரை ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தய்யா, கரோனா நோயாளிகளுக்கு வழங்கி வந்த ஆயுர்வேத லேகியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகம் இரண்டே நாளில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கரோனா நோயாளிகளுக்கு ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியத்தை வழங்க, அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் கரோனா முதல் அலையின்போது மதுரையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் தயாரித்த கரோனாவை குணப்படுத்தும் இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடிக்கு ஆயுஷ் அமைச்சகம் கடந்த ஓராண்டாக அனுமதி வழங்காமல் உள்ளது.
சித்த மருத்துவர் சுப்பிரமணியன், 66 மூலிகைகள் அடங்கிய இம்ப்ரோ மருந்து பொடியை தயாரித்துள்ளார். இந்த மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி வழங்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இம்ப்ரோ மருத்துவ பொடியை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க தமிழக மருத்துவக் குழுவுக்கு உத்தரவிட்டது. தமிழக மருத்துவக் குழுவும் ஆய்வு செய்து, இம்ப்ரோ பொடியில் கரோனா கிருமியை கொல்லும் சக்தி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து உயர் நீதிமன்ற அமர்வு, மத்திய ஆயுஷ்அமைச்சகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இம்ப்ரோ பொடியை ஆய்வு செய்து அனுமதி வழங்க உத்தரவிட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். இருப்பினும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆனந்தய்யாவின் ஆயுர்வேத லேகியத்துக்கு இரண்டே நாளில் அனுமதி வழங்கியதுபோல், இம்ப்ரோ பொடிக்கும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என மருத்துவர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இம்ப்ரோ பொடியில் என்னென்ன மூலிகைகள் கலந்துள்ளன என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளேன். எந்த பக்கவிளைவுகளும் இல்லை. பொடியை ஆய்வு செய்து அதில் கரோனா கிருமியை கொல்லும் சக்தி இருப்பதாக தமிழக மருத்துவக் குழுவே தெரிவித்துள்ளது. இந்த மருந்து பொடியை சாப்பிட்டு ஏராளமானோர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். பொடியை அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளேன்.
ஆந்திராவைச் சேர்ந்த பாரம்பரிய மருத்துவரின் லேகியத்துக்கு இரண்டு நாளில் அனுமதி வழங்கும் மத்திய அரசு, தமிழக சித்த மருத்துவரின் இம்ப்ரோ பொடிக்கு அனுமதி வழங்காமல் இருப்பது ஏன்? தமிழக முதல்வர் தலையிட்டு இம்ப்ரோ பொடிக்கு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.