Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

கரோனா தொற்று சிகிச்சைக்கு ரூ.19 லட்சம் கட்டணம்: தனியார் மருத்துவமனை விளக்கம் அளிக்க உத்தரவு

கோப்புப் படம்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் அருகே ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் எம்.சுப்ரமணியம். மே 3-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9-ம் தேதி உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு, ஒரு ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.40 ஆயிரம் வீதம் கட்டணம் நிர்ணயித்து, 5 மருந்து குப்பிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் உறுதி செய்யப்பட்டு, மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24-ம் தேதி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் அழைத்த சுப்ரமணியம், தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், நீண்ட நேரமாக சத்தம் போட்டும் யாரும் வரவில்லை. உதவிக்கு யாரையாவது உள்ளே வரக்கூறுமாறு தெரிவித்ததாக தெரிகிறது. சுப்ரமணியத்தின் குடும்பத்தினர் மருத்துவமனை செவிலியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பிறகு மருத்துவமனைக்கு சென்றபோது, ஆக்ஸிஜன் இருப்பு குறைவாக இருப்பதால், சுப்ரமணியத்தை அழைத்துச் செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றி சுப்ரமணியத்தை அவரது குடும்பத்தினர் திருப்பூரில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றியுஉள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் 25-ம் தேதி உயிரிழந்தார்.

இவ்விவகாரத்தில் ரசீது தராமல் மருத்துவமனை நிர்வாகம் ரூ.19 லட்சத்து 5 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளது, ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளது, டிஸ்சார்ஜ் அறிக்கை தராதது, சிகிச்சையில் அலட்சியம் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரமணியத்தின் குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கமளிக்க சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை புதிய கரோனா தொற்றாளர்களை சிகிச்சைக்கு சேர்க்க அம்மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை எவ்வித குறைபாடும் இன்றி கவனித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x