Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தாய், தந்தையை இழந்த 91 குழந்தைகள்: அரசின் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை

கோவையில் கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த 91 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.சுந்தர் தெரிவித்தார்.

கரோனா தொற்றால் பெற்றோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தைகளுக்கு பாதுகாவலர் இல்லையெனில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக தற்காலிகமாக தங்கவைக்கப்படுகின்ற னர். இதற்காக கோவையில் 3 காப்பகங் கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், தற்போது 4 குழந்தைகள் உள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு தேவையான உணவு, தங்குமிடம் ஆகியவை அரசின் சார்பாக ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் இதுவரை 61 குடும்பங்களைச் சேர்ந்த 91 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், தாய்,தந்தை இருவரையும் இழந்த இரு குழந்தைகளும் அடங்குவர். இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆர்.சுந்தர் கூறியதாவது:

கண்டறியப்பட்ட குழந்தைகளில் 61 பேருக்கு நிதியுதவி தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள் 20 பேருக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு மூலமாக நான்கு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டபிறகு, அதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாலோ அல்லது சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அவர்களது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் இல்லங்களில் சேர்த்து தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்க வழிவகை செய்து வருகிறோம். இத்தகைய குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் இலவச உதவி தொலைபேசி எண்ணான 1098-ல்தொடர்புகொள்ளலாம்.

மேலும், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை 0422-2300305, 9944212479 என்ற எண்ணிலும், குழந்தைகள் நலக் குழுவை 9944481285 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x