

நீலகிரி மாவட்டத்தில் சுமார் ஒருலட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம்செய்து வருகின்றனர். மாவட்டத்தில் 180 தனியார் தேயிலைத்தொழிற்சாலைகள் உள்ளன.
அரசுக்கு சொந்தமாக 16கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் (இண்ட்கோ) உள்ளன. இதில், 30 ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.இவர்கள், தங்கள் தோட்டத்தில் விளையும் பசுந்தேயிலையை பறித்து,தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கான விலையை,அங்கத்தினருக்கு தொழிற்சாலைகள் வழங்குகின்றன.
கடந்த ஆண்டு கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத் தூளை இண்ட்கோ சர்வ் விற்பனை செய்தது. ஆனால், இந்த லாபத்தில்அங்கத்தினர்களுக்கு பங்கு அளிக்கவில்லை என அங்கத்தினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நெலிகொலு சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் கூறியதாவது:
கடந்த ஆண்டு கரோனா காலத்தில் கேரளாவுக்கு 1,640 மெட்ரிக் டன் தேயிலைத் தூளை இண்ட்கோசர்வ் விற்பனை செய்தது. இதில் கிடைத்த லாபத்தை அங்கத்தினர்களுக்கு அளிக்காமல், தொழிற்சாலைகளுக்கு வர்ணம் பூசுதல் மற்றும் தேவையில்லாத பணிகளுக்கு இண்ட்கோ சர்வ் நிர்வாகம் செலவு செய்து வருகிறது.அன்றையகாலத்தில் தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையான கிலோவுக்கு ரூ.20 வழங்காமல், அங்கத்தினர்களுக்கு ரூ.14 மட்டுமே வழங்கியது.
அதிலும், பல தொழிற்சாலைகள், அங்கத்தினரிடம் கொள்முதல்செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு இதுவரை பணம் வழங்கவில்லை. எப்பநாடு தேயிலைத் தொழிற்சாலை கடந்தாண்டு கொள்முதல் செய்த தேயிலைக்கான தொகை ரூ.50 லட்சம் இதுவரை வழங்கவில்லை.
தற்போது தமிழக அரசு சார்பில்ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் தொகுப்பில் தேயிலைத் தூள்வழங்கப்படவுள்ளது. இதற்கானதேயிலைத் தூளும், இண்ட்கோசர்வில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்திலாவது அங்கத்தினர்களுக்கு பங்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இண்ட்கோ சர்வ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘இண்ட்கோ சர்வ் மேலாண்மை இயக்குநர் மாற்றப்பட்டுள்ளார், புதிய அதிகாரி பொறுப்பேற்றதும், அங்கத்தினர்களின் கோரிக்கைகளை தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.