Last Updated : 02 Jun, 2021 03:13 AM

 

Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

கடந்த 2 ஆண்டில் டீசல் லிட்டருக்கு ரூ.19.73 விலையேற்றம்; பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்வதால் லாரி தொழில் கடும் பாதிப்பு: கடன் தவணையை செலுத்த சலுகை அளிக்க லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

கோப்புப்படம்

நாமக்கல்

கடந்த 2 ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.21, டீசல் ரூ.19.73 வரை விலை உயர்ந்துள்ளது. இது லாரி உள்ளிட்ட சரக்கு வாகனப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடுவோரை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதன்படி கடந்த 2019-ம் ஆண்டு மே 31-ம் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.70.88, பெட்ரோல் ரூ.75.04-க்கு விற்பனையானது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை இந்தாண்டு மே 31-ம் தேதி வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசல் ரூ.90.61-க்கும், பெட்ரோல் விலை ரூ.96.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. .

இதன்படி கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லிட்டர் டீசல் ரூ.19.73, பெட்ரோல் ரூ.21.43 விலை ஏற்றம் கண்டுள்ளது. இது சரக்கு வாகனப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் லாரி உரிமையாளர்களை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளது. இதுதொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், லாரி வாடகையை உயர்த்த முடியாமல் லாரி உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் லாரித்தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், பொருட்கள் போக்குவரத்தில் தேக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லாரிகளுக்கு பாரம் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

லாரிகளுக்கு வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை செலுத்த முடியாமல் பல லாரி உரிமையாளர்களின் வாகனங்களை நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்து வருகின்றன. இதில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தாண்டு டிசம்பர் மாதம் வரை லாரிகளுக்கு பெற்ற கடனுக்கான மாதாந்திர தவணைகளை அபராத வட்டிஇல்லாமல் தள்ளி வைக்க வேண்டும்.

கடந்த மே மாதத்தில் மட்டும் 1 லிட்டர் டீசலுக்கு ரூ. 4.17, பெட்ரோலுக்கு ரூ. 5 வரையிலும் விலை ஏற்றம் கண்டுள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் உயர்ந்துள்ளது. இப்படி நாள் தோறும் விலை உயர்த்துவதற்கு பதில் குறிப்பிட்ட மாத இடைவெளியில் ஒரே முறையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயித்தால் லாரி, ட்ரெய்லர், டேங்கர் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதற்கேற்ப வாடகையை நிர்ணயம் செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x