

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி, ஏற்காடு பூங்காவில் மலர் செடி தொட்டிகள் மூலம், ‘தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என 100 அடி நீளத்துக்கு ஆங்கில வாசகம் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலை தடுக்க மக்களிடையே அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு அண்ணா பூங்காவில், மலர் செடி தொட்டிகளைக் கொண்டு, ‘கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள், உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என ஆங்கிலத்தில் வாசகம் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோடை மலர்க்கண்காட்சிக்காக தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்காடு அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களிலும் மலர் செடிகள் ஏற்கெனவே நடப்பட்டு, அவை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பால்சம், சால்வியா கோழிக்கொண்டை உள்ளிட்ட பலவகை மலர்களைக் கொண்ட, 1,500 மலர் செடி தொட்டிகளை எழுத்து வடிவில் அடுக்கி வைத்து, சுமார் 100 அடி நீளத்துக்கு, ‘தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என விழிப்புணர்வு வாசகத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.