

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையை, வரும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆசிரியர்கள் பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதிஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதிகட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் மே 31-ம் தேதியுடன் பணிஓய்வு பெற்று விட்டதால் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமெனக் கோரி ஏ.ஏ.மோகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இந்த வழக்கை ஏற்கெனவே பல நீதிபதிகள் விசாரித்து விட்டனர். கடந்த மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டபோது இந்த வழக்கை ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டது. ஆனால் கரோனா ஊடரங்கு காரணமாக இன்னும் இந்த வழக்கு விசாரணை தள்ளிக்கொண்டே போகிறது.
தற்போது வரை 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் புதிதாக ஒரு நீதிபதி இந்த வழக்கை விசாரித்தால், வழக்கு விசாரணை இன்னும் காலதாமதம் அடையும்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பணபலம் மிக்கவர்கள் என்பதால் தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ``ஒரு வழக்கை விசாரித்து வரும் கீழமை நீதிமன்ற நீதிபதி பணி ஓய்வு பெற்றால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது.
எனவே காலியாக உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி பணியிடத்தை 15 நாட்களுக்குள் நிரப்ப உயர் நீதிமன்ற பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்த வழக்கை தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து ஜூலைக்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.