Published : 02 Jun 2021 03:13 AM
Last Updated : 02 Jun 2021 03:13 AM

நடமாடும் கடைகளில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை

சென்னையில் நடமாடும் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால், மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கமான தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள், குளிரூட்டும் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது 50 படுக்கைகள் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களுடன் அமைந்துள்ளது. இந்த மையத்தை நேற்று திறந்துவைத்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் சிரமமின்றி கிடைப்பதற்காக நடமாடும் விற்பனை சேவை மாநகராட்சி மூலமாக தொடங்கப்பட்டுள்ளது.

3,200 கடைக்காரர்கள்..

சென்னையில் மளிகைப் பொருட்களை விற்க இதுவரை 3,200 கடைக்காரர்கள் மாநகராட்சியில் பதிவு செய்துள்ளனர். அதுகுறித்த விவரங்கள் மாநகராட்சி இணையதளம் மற்றும் `நம்ம சென்னை' செயலி போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புகொண்டு, தேவையான மளிகைப் பொருட்களை பெறலாம்.

மளிகைப் பொருட்களை யாரேனும் அதிக விலைக்கு விற்றால், அதுகுறித்து மாநகராட்சி புகார் எண்ணுக்கு தகவல் தரலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வட்டார இணை ஆணையர் பி.என்.தர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தி மலர், எம்.பி. தயாநிதி மாறன், எம்எல்ஏ கே.எம்.மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x