

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரக தொழில் துறைஅமைச்சர் தா.மோ.அன்பரசன்,சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் பிரிவு,புதிதாக திறக்கப்பட்ட 100 கரோனாபடுக்கைகள், கரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெறும் பகுதி எனபல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "செங்கல்பட்டு அரசுமருத்துவமனையில் கரோனா பாதித்தவர்களுக்கு 680 படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவில் 165 படுக்கைகள் உள்ளன. எனவே இங்கு படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. கரோனா தொற்றும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆக்சிஜன் பிளான்ட் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 89 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், மருத்துவர்கள் செவிலியர்கள் பணியிடங்களை நிரம்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு தமிழக அரசுக்கு தடுப்பூசிகளை பாரபட்சம் இல்லாமல், கால தாமதம் இல்லாமல் உடனே வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலையான எச்.எல்.எல்.நிறுவனம் 10 ஆண்டு காலமாக இயங்காமல் உள்ளது. எச்.எல்.எல்.நிறுவனம் தொடர்பாக மத்திய அரசிடமிருந்து விரைவில் நல்ல முடிவுவரும் என எதிர்பார்க்கிறோம். தடுப்பூசி மட்டுமே இந்த பேரிடருக்கான ஒரே தீர்வு.
வரும் 6-ம் தேதிக்கு பிறகு தமிழத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருக்காது. தமிழகத்தில் கரும் பூஞ்சை நோயால் 518 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 20 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 பேர்சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக 13 பேர்குழுவை நியமித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம்" என்றார்.
பின்னர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.