திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 24 படுக்கைகள்: அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூரில் மாட்டு கொட்டகை எரிந்து பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் க.பொன்முடி.
திருக்கோவிலூர் அடுத்த டி.குன்னத்தூரில் மாட்டு கொட்டகை எரிந்து பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் க.பொன்முடி.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய 24 படுக்கைகள் அமைக்கப்பட்டு அவை நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு படுக்கை வார்டுகளை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வர் அறிவுறுத் தலின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, திருக்கோவிலூர் பகுதிகளில் உள்ளோருக்கு கரோனா தொற்று உயர் சிகிச்சை மேற்கொள்ள கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை அல்லது முண்டியம்பாக்கம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது.

இந்நிலையை கருத்தில் கொண்டு திருக்கோவிலூர் அரசுபொது மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 24 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு நேற்று முதல் ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா தொற்றாளர்களுக்கு இம்மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும்.

பொதுமக்கள் கரோனா நோய் குறித்து அலட்சிய போக்கினை கடைபிடிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே நோய் தொற்றினை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வர இயலும்.எனவே, பொதுமக்கள் சமூகபொறுப்புணர்வுடன் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியேவருவதை தவிர்த்தல் போன்றவழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நிவாரணம் வழங்கல்

முன்னதாக, திருக்கோவிலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி.குன்னத்தூர் கிராமம் வீரன் கோவில் தெருவில் உள்ள அஞ்சலை, ஏழுமலை, வீரன் ஆகியோரின் குடிசை வீடு மற்றும் மாட்டுக்கொட்டகை முழுவதும் நேற்று முன்தினம் எரிந்து சேதமானது. இப்பகுதியை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திருக்கோவி லூர் வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சதிஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in