மாமல்லபுரம் நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறுமா? - சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மாமல்லபுரம் நாட்டியாஞ்சலி இந்த ஆண்டு நடைபெறுமா? - சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

மாமல்லபுரம் நாட்டியாஞ்சலி தொடர்பாக சுற்றுலாத்துறை அறிவிப்பு ஏதும் வெளியிடாததால், இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடைபெறுமா என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை குடவரை கோயில் வளாகத்தில், இந்திய நாட்டி யாஞ்சலி விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு நடைபெறும்.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால், ஏரிகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை நின்று சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. சேத விவரங்கள் மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்வது போன்ற பல்வேறு பணிக ளில் அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டுக் கான இந்திய நாட்டியாஞ்சலி விழா நடத்துவது தொடர்பாக, சுற்று லாத்துறை இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில், இந்திய பாரம்பரிய நாட்டியாஞ்சலி விழாவை கண்டு ரசிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருவர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விழாவில் பங்கேற்று, தங்களது மாநிலத்தின் பாரம்பரிய நாட்டிய நிகழ்ச்சியை நடத்துவார்கள்.

சுற்றுலாத்துறை வழக்கமாக ஒருமாதம் முன்பே நாட்டியாஞ்சலி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும். ஆனால், இதுவரை அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.

இது குறித்து, மாமல்லபுரம் சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக சுற்றுலாத்துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில், நாட்டியாஞ்சலி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in