

தூத்துக்குடியில் வீட்டு மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொறியியல் பட்டதாரி இளம்பெண் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயமடைந்தார்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 7-வது தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்ட் வீட்டில் ராஜமுருகன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வருகிறார். தச்சு வேலை செய்து வரும் ராஜமுருகனுக்கு மனைவி மற்றும் பரமேஸ்வரி (22) என்ற மகளும், சுந்தர் (21)என்ற மகனும் உள்ளனர். பரமேஸ்வரி பொறியியல் படித்துவிட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சுந்தர் கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார்.
ராஜமுருகன் குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டின் மேற்கூரை உட்புறம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்துள்ளது. அதை வீட்டின் உரிமையாளரான நடராஜன், கொத்தனார் மூலம் சிமெண்ட் வைத்து பூசி சரிசெய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மேற்கூரையில் பூசப்பட்ட சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து, தூங்கிக் கொண்டிருந்த பரமேஸ்வரி மற்றும் சுந்தர் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே பரமேஸ்வரி உயிரிழந்தார். சுந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தச்சுத் தொழிலாளியான ராஜமுருகன் கஷ்டமான சூழ்நிலை யிலும் குழந்தைகளை படிக்க வைத்துள்ளார். மகள் படித்து முடித்துவிட்டு கடந்த 6 மாதமாக வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மகளை பறிகொடுத்து விட்டு ராஜமுருகன் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.