

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இரு மண்டபங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நேற்று (மே 31) கோயில் வசம் கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் ராஜகோபுரம் எதிரே அம்மா மண்டபம் செல்லும் சாலையில் மிகப் பழைமையான இரு நான்கு கால் மண்டபங்கள் உள்ளன. இவை வழிநடை உபய மண்டபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோயில் உற்சவரான நம்பெருமாள் ஆடிப்பெருக்கு நாளன்று அம்மா மண்டபம் செல்லும் வழியில், இந்த மண்டபங்களில் எழுந்தருளி சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.
இந்தநிலையில், இந்த மண்டபங்களை சிலர் ஆக்கிரமித்து டிபன் கடை, பெட்டிக் கடை, புத்தகக் கடை உள்ளிட்டவற்றை வைத்திருந்தனர். இந்த மண்டபத்தைக் காலி செய்ய வலியுறுத்தி கோயில் நிர்வாகம் சார்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஏறத்தாழ 40 ஆண்டுகளாக அந்த மண்டபத்தை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யவில்லை.
இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மே 31-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தொடர்புடையவர்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் அல்லது கோயில் நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளலாம் என இறுதி கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மேற்பார்வையில், போலீஸார் பாதுகாப்புடன் இந்த மண்டபங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, இரும்பு கிரில்கள் வைத்து மூடி, சீல் வைக்கப்பட்டன. ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த மண்டபங்கள் மீட்கப்பட்டுள்ளதை பெருமாள் பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கநாதன் கூறுகையில், ''இந்த மண்டபங்கள் கோயில் உற்சவரான நம்பெருமாள் வந்து தங்கிச் செல்லும் மண்டபங்களாக ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், சிலர் இவற்றை ஆக்கிரமித்து, அதில் கடைகளை நடத்தி வந்தனர். இதில் கொடுமை என்னவெனில், பெருமாள் வந்து தங்கும் இந்த மண்டபத்தில் இருந்த டிபன் கடையில் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டதுதான். நீதிமன்ற உத்தரவுடன் கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளது பாராட்டுக்குரியது. இதேபோன்று எஞ்சியுள்ள கோயிலுக்கு சொந்தமான இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்'' என்றார்.