Published : 01 Jun 2021 08:44 PM
Last Updated : 01 Jun 2021 08:44 PM

கரோனா இரண்டாம் அலை: வேலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 22,232 பேருக்கு தொற்று

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 22,232 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் 372 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 383 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான டாக்டர் ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலதி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் ஸ்வர்ணா பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை தொற்று பாதிப்பு 22,232 ஆக உள்ளது.

இவர்களில் 18,269 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 371 பேர் இறந்துள்ளனர். சுமார் 3592 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 7 லட்சதை்து 39 ஆயிரத்து 441 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 42,947 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு அரசு ஆய்வகம், 4 தனியார் ஆய்வகங்கள் மூலம் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. வேலூர் மாநகராட்சியில் தொற்று குறைந்தாலும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

5,187 படுக்கை வசதிகள்:

வேலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்காக 5,187 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1870 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டது. மேலும், 444 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன.

மூன்று கோவிட் கேர் சென்டர்களில் 2181 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவை ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களில் கூடுதலாக 383 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 260, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 50, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 18, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் 25, தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி மையத்தில் 30 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.1.12 கோடி அபராதம் வசூலிப்பு:

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.1.12 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வசதிக்காக 887 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2.22 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கரோானா தொற்று தாக்கத்தை குறைக்கும் வகையில் 100 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் வீதம் நியமிக்கப்பட்டு அவர்கள் தினமும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களின் இதயதுடிப்பு, ஆக்சிஜன் அளவை கண்காணித்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை அறை தொடங்கப்பட்டுள்ளது. இதில், வரப்பெறும் அழைப்புகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

மாவட்டத்தில் குழந்தைகள், காப்பகங்கள், முதியார் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் அவ்வப்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x