Published : 01 Jun 2021 07:31 PM
Last Updated : 01 Jun 2021 07:31 PM

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறினால் பணி நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் போதிய கல்வித் தகுதி இல்லாமல், நூலக உதவி தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்ற கவுதமன் என்பவரின் நியமனத்தையும், பதவி உயர்வையும் ரத்து செய்யக் கோரி, ரமேஷ், ராம்குமார், கனகராஜ் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை இன்று (ஜூன் 01) விசாரித்த நீதிபதி மகாதேவன், தன் கல்வித் தகுதிச் சான்றிதழைப் பல்கலைக்கழக விசாரணையின்போது கவுதமன் தாக்கல் செய்யவில்லை என்றும், உரிய கல்வி தகுதி பெறாத அவரது நியமனமும், பதவி உயர்வும் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியில்லாத கவுதமனை ஓய்வுபெற அனுமதித்த பல்கலைக்கழகத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அவரை நியமனம் செய்யப் பரிந்துரைத்த தேர்வுக் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார்.

பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் பணி நியமனம் செய்யும்போது வெளிப்படைத் தன்மையைப் பின்பற்ற வேண்டும் எனவும், கல்வி நிறுவனங்கள் பணி நியமனத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு முன், விண்ணப்பதாரர் பெயர், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்களைப் பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகை மற்றும் இணையதளங்களில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பணியாளர் தகுதி குறித்த கேள்வி எழும்போது, அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் விசாரணை நடத்தி அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும், நேர்முகத் தேர்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதி, விண்ணப்பதாரர்கள் யாரேனும் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டால், அதனை விரைந்து ரத்து செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை தேர்வுக் குழு உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் அல்லது சான்றுகள் அளித்து விண்ணப்பதாரர்கள் பணியில் சேர்ந்து இருப்பதாகக் கண்டறிந்தால், அவர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்களை அவரிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இட ஒதுக்கீட்டின் கீழ் பல்கலைக்கழகங்களில் பணி நியமனம் பெறுவதற்காக மதம் மாறியது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x