திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக 350 படுக்கைகள்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூன் 4-ம் தேதி கூடுதலாக 350 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் படுக்கை வசதிகளைக் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:
''திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100 கூடுதல் படுக்கை வசதிகள், குழந்தைகள் மற்றும் தாய் சேய் நலப் பிரிவின் 7 மாடி கட்டிடத்தில் 3 மற்றும் 4-வது மாடியில் 100 படுக்கைகள், மின்விசிறி வசதியுடன் அமைக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளது. இங்கு ஓரிரு நாளில் ஆக்சிஜன் பொருத்தப்படும்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெறத் தயார் நிலையில் உள்ளது. மேலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 100 கூடுதல் படுக்கை வசதிகளுடன் தனியாகக் கூடாரம் அமைக்கப்பட்டு அங்கு மின்விசிறிகள், கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதுவும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இங்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட உள்ளன. மொத்தத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூன் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 350 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோயாளிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு செய்தபோது மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யா பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) தேவராஜ் (ஜோலார்பேட்டை), வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
