

கரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் தவிக்கும் தெருநாய்களின் பசியைப் போக்க மதுரை மாநகராட்சி ஏற்பட்டால் தினமும் வழங்கப்படும் 40 லிட்டர்பால், 600 கிலோ ரொட்டி துண்டுகளை விலங்குகள் நல ஆர்வலர்கள், வீதி வீதியாகச் சென்று தெருநாய்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன.
இந்த நாய்கள், மக்கள் வீடுகளில் மிதமாகும் சாப்பாடு, கடை வீதிகள் மற்றும் ஹோட்டல்களில் வீணாகும் உணவுக் கழிவுகள், குப்பைமேடுகள் மற்றும் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் பல்வகை கழிவுகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன.
தற்போது வாயில்லாத ஜீவன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நகர்ப்புறங்களில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் பிரத்தியேக உணவுகளை தயார் செய்து தெரு நாய்களுக்கு வழங்குகின்றனர்.
தற்போது ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கிவிட்டனர். ஹோட்டல்கள் மற்றும் கடைகள் வீதிகள் அடைக்கப்பட்டன. அதனால், தெரு நாய்களுக்குத் தேவையான உணவு கிடைக்கவில்லை. தண்ணீரும் இல்லாமல் தெரு நாய்கள் ஆங்காங்கே மயங்கிக் கிடப்பதும், உணவில்லாமல் இறக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘கரோனா’ பெருந்தோற்று காலத்தில் தெருநாய்களுக்கு உணவளிக்க உதவ வேண்டும் என்று ‘புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் வசிக்கும் நாய்களின் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு’ நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் தற்போது மாநகராட்சி நிர்வாகம், ‘கரோனா’ ஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் தெருநாய்களுக்கு தினமும் 40 லிட்டர் பால், 600 கிலோ ரொட்டி துண்டுகள் வழங்கி வருகிறது.
மேலும், உணவு தயார் செய்து வழங்குவதற்கு அரிசியும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. மாநகராட்சியின் இந்த முயற்சியால் தற்போது தெருநாய்கள் பராமரிக்கும் சமூக ஆர்வலர்கள், அந்த உணவுகளை தெருக்களில் உணவில்லாமல் தவிக்கும் நாய்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். தெரு நாய்கள் அவற்றை சாப்பிட்டு பசியாறிச் செல்கின்றன.
இதுகுறித்து நன்றி மறவேல் தெருநாய்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.பி.மாரிக்குமார் கூறுகையில், ‘‘தெருநாய்களுக்கு உணவளித்து வந்த 15க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களிடம் மாநகராட்சி தினமும் வழங்கும் உணவுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு , அவர்கள் துணையோடு 300க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு அவை முறையாகக் கொடுக்கப்படுகிறது.
அத்துடன் தண்ணீரும் வைத்து தாகத்தையும் தீர்க்கிறோம். ஊரடங்கு முடியும் வரை இந்தச் சேவை தொடரும். எங்களுடைய இந்த செயல்பாடுகளைப் பார்த்து தற்போது மேலும், இந்த பசியாற்றும் முயற்சிக்கான உணவுத் தேவைக்குரிய அரிசி மற்றும் இதர பொருட்களையும் சேகரித்து உதவிட மாநகராட்சி ஆணையாளர் உறுதியளித்துள்ளார்.
இந்தக் கொடுமையான பெருந்தொற்று காலத்தில் மதுரை மாநகராட்சியின் இந்தக் கடமையுணர்விற்கும், உதவிக்கும் சமூக நாய்களின் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்கள், மிருகநல ஆர்வலர்கள் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறோம், ’’ என்றார்.