

அஞ்செட்டி, மத்தூர், ஊத்தங்கரை உட்பட மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் கரோனா சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான 5 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை ஓசூர் சேவாபாரதி கிளை நன்கொடையாக இன்று வழங்கியது.
ஓசூர் அப்பாவு நகரில் இயங்கி வரும் சேவாபாரதி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு சேவாபாரதி மாநிலச் செயலாளர் இந்துமதி தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட கவர்னர் ரவிவர்மா முன்னிலையில் மாவட்ட சேவாபாரதி தலைவர் மருத்துவர் சண்முகவேல் பங்கேற்று ஊத்தங்கரை, மத்தூர் மற்றும் அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள் உள்ளிட்ட கரோனா தடுப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.
இதுகுறித்து மருத்துவர் சண்முகவேல் கூறும்போது, ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் கரோனா சிகிச்சை மையங்களுக்கு வழங்குவதற்காகத் தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு மூலமாக 5 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், முகக்கவசம், சானிடைசர், கையுறைகள், கபசுரக் குடிநீர், ஹோமியோ ஆர்சனிக் ஆல்பம்- 30 மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை மாவட்ட சேவாபாரதி அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கரோனா தடுப்பு உபகரணங்களில் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும், இதர மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மீதமுள்ள 2 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்காக அஞ்செட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சேவாபாரதி கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ரேணுகாதேவி, இணைச் செயலாளர் கிருத்திகா உள்ளிட்ட சேவாபாரதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.