கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு: அமைச்சர் இ.பெரியசாமி திறந்துவைத்தார்

கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு: அமைச்சர் இ.பெரியசாமி திறந்துவைத்தார்
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடி மற்றும் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,ராமநாதபுர மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருபோக சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதி முதல்போகத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் நீர்திறக்கப்பட வேண்டும்.

ஆனால் கடந்த 14ஆண்டுகளாக ஜூன் முதல் தேதியில் நீர்மட்டம் 130அடியை எட்டாததால் அந்த தேதியில் நீர் திறக்க முடியாதநிலை ஏற்பட்டது எனவே ஜூன் கடைசி வாரம், ஜூலையிலே நீர்திறக்கப்பட்டு வந்தது. இதனால் இரண்டாவது போக சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அணைநீர்மட்டம் இன்று 130.90அடியை எட்டியதால் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அணையில் இருந்து நீர்திறந்து வைத்தார்.

ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நீர் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் 11ஆயிரத்து 807ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்தில் 2ஆயிரத்து 412ஏக்கரும், போடி வட்டத்தில் 488ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 14ஆயிரத்து 707ஏக்கர் விளைநிலங்கள் இதன் மூலம் பயன்பெறும். இப்பகுதி பாசனத்திற்காக 200கனஅடியும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100கனஅடியும் என விநாடிக்கு 300கனஅடி வீதம் 120நாட்களுக்கு நீர்திறக்கப்படும்.

நிகழ்ச்சியில் கம்பம்,ஆண்டிபட்டி,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கேஎஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்ச்செல்வன், லட்சுணன் கண்காணிப்புப் பொறியாளர் எம்.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வைகைஅணையில் வரும் 4-ம் தேதி பெரியாறு பிரதான கால்வாய் முதல்போக பாசனத்திற்காக நீர்திறக்கப்பட உள்ளது. முல்லைப்பெரியாறு மற்றும் வைகைஅணையில் மிகச்சரியான தருணத்தில் நீர்திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in