கையிருப்பு இல்லை: கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்

கோவை மாநகராட்சி மூலம் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் காத்திருந்தோர் | படம்:ஜெ.மனோகரன்.
கோவை மாநகராட்சி மூலம் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் காத்திருந்தோர் | படம்:ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

பொதுமக்களுக்குச் செலுத்தப் போதிய கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் கோவை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

தமிழக அரசின் 18 வயது முதல் 44 வயதினருக்கான கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் மாநகராட்சியில் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா எனக் கணக்கெடுக்கும் முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்குக் கோவை மாநகராட்சி மூலம் இன்று (ஜூன் 1) நடைபெற்ற சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

எனினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் கோவையில் தடுப்பூசி போடும் பணி இன்று நடைபெறவில்லை.

இது தொடர்பாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, "கோவையில் கடந்த 10 நாட்களில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பால் முகவர்கள், தினசரி நாளிதழ் விநியோகிப்பவர்கள், சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நபர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் என 80 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 577 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தற்போது தடுப்பூசிகள் ஏதும் கையிருப்பில் இல்லை. எனினும், கோவையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, இனிவரும் நாட்களில் அனுப்பி வைக்கப்படும் தடுப்பூசி எண்ணிக்கையில் கோவைக்குக் கூடுதலாக அனுப்பிவைக்குமாறு அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். வரும் 6-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதற்கு முன்பாகவே தடுப்பூசி கிடைத்தாலும் அவற்றைச் செலுத்தும் பணி உடனடியாகத் தொடங்கும்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in