நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் எஸ்பி.,யிடம் புகார்

நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி ராமநாதபுரம் எஸ்பி.,யிடம் புகார்
Updated on
1 min read

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி, நடிகை சாந்தினி மீது ராமநாதபுரம் எஸ்பி.,யிடம் புகார் அளித்தார்.

மலேசியா நாட்டைச் சேர்ந்த நடிகை சாந்தினி, சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மே 28-ல் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் மே 30-ம் தேதி அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் பரணி ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கருக்கலைத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.

அதனையடுத்து சென்னை தனிப்படை போலீஸார் விசாரணை செய்வதற்காக மணிகண்டன் வசிக்கும் மதுரை அண்ணாநகர் வீடு, சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்து தேடினர்.

ராமநாதபுரத்தில் மணிகண்டனின் தந்தை, தாய் வசிக்கும் வீடும் பூட்டப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைப்பாணை வழங்க போலீஸார் மணிகண்டனை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணிகண்டனின் மனைவி டாக்டர் வசந்தி இன்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் நடிகை சாந்தினி தனது கணவர் மணிகண்டன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் அவதூறாகப் புகார் அளித்துள்ளார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மிகுந்த மனஉளைச்சல் அடைந்துள்ளோம். எனவே நடிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி புகார் மனு அளித்தார். இதுதொடர்பான வழக்கு சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மனுவை சென்னை காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in