

மருத்துவக் காரணங்கள், இறப்புக்காக மட்டும் கோவை மாவட்டத்துக்குள் வந்து செல்ல இ-பதிவு அனுமதிக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூன் 01) பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
"முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பால் விநியோகம், குடிநீர், தினசரி பத்திரிகை விநியோகம் இருக்கும். நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும்.
மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்கும். ஏடிஎம், பெட்ரோல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும். உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த சேவை அனுமதிக்கப்படும். சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசியப் பொருட்கள் செல்லவும் அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள், கட்டுமான வளாகத்தில் தங்கியிருக்கும் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் இதர சேவைகள் செய்யும் நபர்கள், பயணம் செய்வதற்கு இ-பதிவு செய்திருக்க வேண்டும். தடையின்றித் தொடர்ந்து செயல்பட வேண்டிய தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுக்குப் பொருட்களைத் தயாரித்து வழங்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் கோவை மாவட்டத்துக்கு வருகை தரவும், வெளியே செல்லவும் இ-பதிவு அனுமதிக்கப்படும்.
மருத்துவக் காரணங்கள், இறப்பு, இறப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை. வரும் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை கோவை மாவட்டம் முழுவதும் இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்".
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.