

கரூர் மாவட்ட ரேஷன் கடைகளில் டோக்கன் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாததால், காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஜூன் மாத ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு இன்று (ஜூன் 01) முதல் வரும் 4-ம் தேதி வரை வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் 592 ரேஷன் கடைகளும், 3.15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களும் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன் இன்று காலை முதலே மக்கள் குவிந்தனர்.
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் அல்லது டோக்கன் பெறுவதற்குப் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், மாவட்டத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் டோக்கன் மற்றும் பொருட்கள் வழங்கப்படாததால், மக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், டோக்கன் தயார் செய்யப்படாததால் டோக்கன் வழங்கப்படவில்லை. டோக்கன் வழங்கியபின் ஜூன் 5-ம் தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும் என்பதால் பொருட்களும் வழங்கப்படவில்லை.
கரூர் நகராட்சி கருப்பகவுண்டன்புதூர் ரேஷன் கடையில் காலை 8 மணிக்கு முன்பே 20-க்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், 8.45 மணியளவில் கட்சி நிர்வாகி ஒருவர் இன்று டோக்கன் வழங்கப்படாது எனத் தெரிவித்ததால் காத்திருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அறியாத பலரும் 9 மணிக்கு மேல் வந்து காத்திருந்தனர். அதன்பின், ஒன்பதரை மணிக்கு மேல் வந்த விற்பனையாளர் விவரம் தெரிவித்த பிறகு மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
ரேஷன் கடை விற்பனையாளர்கள் சரியான நேரத்திற்கு வந்து இன்று டோக்கன் வழங்கப்படாது என்ற விவரத்தைத் தெரிவித்திருந்தால் அல்லது அறிவிப்புப் பலகையிலாவது எழுதியிருந்தால், பொதுமக்கள் தேவையின்றி அநாவசியமாகக் காத்திருந்து இருக்க மாட்டார்கள் எனப் பொதுமக்கள் வருத்தப்பட்டனர்.