

கரூர் கரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் குவிந்த நிலையில், குறைந்த அளவு தடுப்பூசியே கையிருப்பு இருந்ததால், அதிகாரியை முற்றுகையிட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகக் காலை முதலே ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் குறைந்த அளவு தடுப்பூசிகளே உள்ளதாகத் தகவல் தெரிந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துத் தகவலறிந்த கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திவ்யா, ''150 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளன. ஏற்கெனவே கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே இன்று (ஜூன் 1-ம் தேதி) தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி இல்லாததால், வந்தபின் தகவல் தெரிவிக்கப்படும்'' என்று பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று புதிதாக வந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி வந்ததும் செலுத்துவதற்கு டோக்கன் வழங்கப்படும் என்று மருத்துவர் திவ்யா தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி வர இன்னும் 5 நாட்களாகும் என்பதால் புதிதாக வந்தவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொள்ள டோக்கன் வழங்கப்பட்டது.
ஏற்கெனவே கடந்த 29-ம் தேதி கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளக் காத்திருந்து தடுப்பூசி இல்லாமல் மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்கள் மீண்டும் நேற்று (மே 31-ம் தேதி) தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தபோது டோக்கன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு மட்டும் இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.