

தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறையாமல் உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 9,093 நபர்களுக்கான பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நலன் கருதி பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலையில் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் முகாமிட்டு, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
எனினும், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த மே.27-ம் தேதி 33,361 ஆக இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, நேற்று (மே 31) 27,936 ஆகக் குறைந்துள்ளதாக, சுகாதாரத்துறை வெளியிடும் தினசரி தரவுகளின் அடிப்படையில் தெரியவந்தது.
இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டதாக, மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் அதேசமயம், தினசரி ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலையளிப்பதாக மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தொடர்ந்து 3 நாட்களாகக் குறைப்பு
இதுகுறித்து, சமூகச் செயற்பாட்டாளரும், மருத்துவருமான வீ.புகழேந்தி கூறும்போது, "தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, கடந்த 27-ம் தேதி 33,361 ஆகவும், 28-ம் தேதி 31,079 ஆகவும், 29-ம் தேதி 30,016 ஆகவும், 30-ம் தேதி 28,864 ஆகவும், 31-ம் தேதி 27,936 ஆகவும் உள்ளதாக அரசின் புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஒப்பிடுகையில், கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதுபோலத் தோன்றினாலும், கரோனா பாதிப்பைக் கண்டறிய ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாகக் குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 27-ம் தேதி 1,64,124 பேரிடம் நடத்தப்பட்ட இப்பரிசோதனை, அதற்கடுத்த நாளில் (மே 28) 1,65,124 பேருக்கு உயர்த்தப்பட்டது. ஆனால், அதன்பின் 29-ம் தேதி 1,63,763 பேர், 30-ம் தேதி 1,62,357 பேர், 31-ம் தேதி 1,53,264 பேர் என, படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மே 30-ம் தேதியையும், மே 31-ம் தேதியையும் ஒப்பிடுகையில், இந்த ஒரே நாளில் மட்டும் 9,093 பேருக்கான பரிசோதனைகள் குறைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
அரசின் நடவடிக்கையில் சந்தேகம்
கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த 27-ம் தேதி 474 பேர், 28-ம் தேதி 486 பேர், 29-ம் தேதி 489 பேர், 30-ம் தேதி 493 பேர், 31-ம் தேதி 478 பேர் என ஏறக்குறைய ஒரே அளவில் நீடிக்கும் நிலையில், தொற்றாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அளவை ஏன் குறைத்துள்ளனர் என்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பாதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா எனவும் தோன்றுகிறது.
ஒருவருக்கு 'பாசிட்டிவ்' ஏற்பட்டால், அவர் சார்ந்த 30-50 வரையிலான நபர்களுக்குப் பரிசோதனை நடத்த வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர்கூட, தமிழ்நாட்டில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம் 10 நபர்களைப் பரிசோதிப்பதாகக் கூறுகிறார்.
அப்படியெனில், தமிழ்நாட்டில் சுமார் 28 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால், அடுத்தடுத்த நாட்களில் 2.80 லட்சம் பேருக்காவது பரிசோதனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தற்போதுள்ள பரிசோதனை அளவைக் குறைக்காமலாவது தொடரலாம். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.
இப்பரிசோதனைகளைக் குறைத்தால் பாதிப்பின் உண்மை நிலவரம் தெரியாமல் போய்விடும். இதனால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. எனவே 'டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்' அதிகமுள்ள திருப்பூர் (35.8%), கோவை (33.9%), ஈரோடு (30.3%), செங்கல்பட்டு (27.6%), திருவாரூர் (27%), திருச்சி (24%) உள்ளிட்ட மாவட்டங்களிலாவது இப்பரிசோதனைகளைக் குறைக்காமல், அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
கிராமங்களில் குடும்பம், குடும்பமாகத் தவிப்பு
இதுகுறித்து, 'மக்கள் சக்தி இயக்க'த்தின் மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் கூறும்போது, "கரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. அதேசமயம், நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்துவோரின் எண்ணிக்கையைக் குறைப்பது வருத்தமளிக்கிறது.
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நகர்ப்புறங்களுக்கு இணையாக ஊரகப் பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புறங்களை ஒதுக்கிவிடக் கூடாது. அப்பகுதிகளில் அதிக அளவிலான மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும்.
காரணம், அங்கு தொற்றுக்குள்ளான ஒரு நபரை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அவரின் மூலம் அவர் சார்ந்த குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் எளிதில் பரவி விடுகிறது. இதனால் கிராமங்களில் குடும்பம், குடும்பமாக மக்கள் கரோனாவால் தவிக்கும் நிலை வந்துவிட்டது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரிக்கிறது.
எனவே, இந்த விஷயத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் மொத்த பரிசோதனை எண்ணிக்கை குறைந்திருக்குமே தவிர, திட்டமிட்டு எக்காரணத்துக்காகவும் அப்படிக் குறைப்பதில்லை. தற்போது ஊரகப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து கிராமங்கள்தோறும் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன" என்றனர்.