

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் இன்று கோரிக்கை அட்டை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2018- 2021 பருவ மருத்துவப் பட்ட மேற்படிப்புக் காலம் மே 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், ஒரு மாத காலம் கூடுதலாகப் பணியாற்றுமாறு அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் இன்று (ஜூன் 01) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், "பட்ட மேற்படிப்புக் காலத்தை நீட்டிப்பு செய்யாமல், அனைத்து அரசு சாரா பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களையும் முதுநிலை குடியிருப்பு மருத்துவர்களாக அல்லது அரசு உதவி மருத்துவராகக் கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இந்த ஒரு மாத பயிற்சிக் காலத்தை முதுநிலை குடியிருப்பு பணிக் காலத்தில் சேர்த்து, அதற்கேற்ப ஊதியத்தொகை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். கரோனா காலப் பணியை 2 ஆண்டு கட்டாய சேவைக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் சேவையைக் கருத்தில் கொண்டு 2 ஆண்டு கட்டாய சேவைக் காலத்தை ஓராண்டாகக் குறைக்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களின் இறுதியாண்டுத் தேர்வு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு நடத்தும் சூழல் ஏற்படுமாயின் குறைந்தது 4 வாரங்கள் முன்னதாகத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசிடமும், மருத்துவக் கல்வி இயக்குநரிடமும் ஏற்கெனவே கடிதம் கொடுத்துள்ளோம். எங்களது ஓராண்டு கால கரோனா பணியைக் கருத்தில் கொண்டு, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் மருத்துவமனை முதல்வர் கே.வனிதா பேச்சுவார்த்தை நடத்தினார். அரசின் கவனத்துக்குக் கோரிக்கைகளை எடுத்துச் செல்வதாக அவர் கூறியதை ஏற்று, மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.