Last Updated : 01 Jun, 2021 11:37 AM

 

Published : 01 Jun 2021 11:37 AM
Last Updated : 01 Jun 2021 11:37 AM

ஊரடங்கிலும் புதுச்சேரியில் மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்வு

புதுச்சேரி

கரோனா ஊரடங்கிலும் புதுச்சேரியில் மே மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின்னர், கடந்த ஜனவரி முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தத் தொடங்கின. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே நிலையாக விற்பனையானது. தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவலால் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பகல் 12 மணி வரை கடைகள் இயங்குகின்றன. மே மாதத்தில் புதுச்சேரியில் தொற்றுப் பரவல் அதிகமாக இருந்தது. மக்கள் பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அச்சூழலிலும் மே மாதத்தில் மட்டும் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை 17 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபற்றி ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலர் சேதுசெல்வம் கூறுகையில், ''புதுச்சேரியில் மே 1-ம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.90.56 ஆகவும், டீசல் விலை 84.02 ஆகவும் இருந்தது. அதையடுத்து மே மாதம் 31-ம் தேதி வரை 17 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 31-ம் தேதியன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.94.50 ஆகவும், டீசல் விலை ரூ.88.72 ஆகவும் உள்ளது.

இந்த விலை உயர்வினால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்துத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு தனக்குள்ள வரி விதிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து விலை உயராத வகையில் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x