கிருஷ்ணகிரி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த காஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த காஸ் டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் பொகலூர் அருகே உள்ள துரிஞ்சி தலைப்பட்டியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் ரமேஷ்(35). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் ரமேஷ், குடியாத்தம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவரது மனைவி தீபா(30), மகன் நித்தீஷ்(1), உறவினர்கள் துரிஞ்சி தலைப்பட்டி அஞ்சலி(34), வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கீழ்ஆலத்தூர் அருகேயுள்ள கே.மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சரளா(35), அவரது குழந்தைகள் சாரிகா(9), ஓவியா(5) உள்ளிட்ட 7 பேருடன், காரில் ஊருக்குச் சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அனைவரும் நேற்று மீண்டும் காரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

காரை ரமேஷ் ஓட்டினார். சென்னை - கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலையில், கந்திகுப்பம் அருகே சுண்டம்பட்டி என்னுமிடத்தில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த காஸ் டேங்கர் லாரி மீது மோதியது.

இதில், ரமேஷ், அவரது மனைவிதீபா, குழந்தை நித்தீஷ், அஞ்சலி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரளா மற்றும் குழந்தைகள் சாரிகா, ஓவியா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரளா உயிரிழந்தார். கந்திகுப்பம் போலீஸார் வழக்கை விசாரிக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in