அல்லும் பகலும் வெள்ள நிவாரணப் பணிகள்- அதிமுகவின் 14-ல் 8 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!

அல்லும் பகலும் வெள்ள நிவாரணப் பணிகள்- அதிமுகவின் 14-ல் 8 தீர்மானங்களில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு!
Updated on
2 min read

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுகவின் 14 தீர்மானங்களில் 8 தீர்மானங்கள் முதல்வருக்கு பாராட்டும், நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக உள்ளன.

ஜெயலலிதாவுக்கு வணக்கமும், வாழ்த்தும்

முதல் தீர்மானத்தில் ஜெயலலிதாவுக்கு வணக்கமும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், கோடானு கோடி கழக உடன்பிறப்புகளின் அம்மா அவர்களுக்கு வணக்கமும், வாழ்த்தும்" என அத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

7-வது முறையாக பொதுச் செயலாளர் பதவி

மூன்றாவது தீர்மானத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக 7-வது முறையாக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுவதாக பாராட்டப்பட்டிருந்தது. அதேபோல் தமிழக முதல்வராக 5-வது முறையாக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அ) கழகப் பொதுச் செயலாளராக 7-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்!

ஆ) தமிழகத்தின் முதலமைச்சராக 5-ஆவது முறையாகப் பதவியேற்றிருக்கும் முதல்வருக்கு வாழ்த்தும், பாராட்டும்!

முதல்வருக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை வழங்கி இருக்கும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியும், பாராட்டும்!

என அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

'அல்லும் பகலும் வெள்ள நிவாரணப் பணிகள்'

முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொண்டதாகக் கூறி 4-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட வரலாறு கண்டிராத கனமழை, வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை இரவு பகலாகக் கண்காணித்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக வழங்கிடப் பாடுபட்ட முதல்வருக்குப் பாராட்டும், நன்றியும்!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னேற்றப் பாதையில் தமிழகம்..

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதாக 7-வது தீர்மானத்தில் பாராட்டு. "நாடே வியந்து போற்றும் வண்ணம் தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் துறை தோறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்டு, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கும் முதல்வருக்குப் பாராட்டு!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பெண்கள் மாண்பை போற்றிய முதல்வர்'

பெண்கள் மாண்பை போற்றும் திட்டங்களை முதல்வர் தந்ததாக பாராட்டி 8-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "தமிழகத்தில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும் உணர்ந்து, அவர்களின் மாண்பையும், மரியாதையையும் போற்றும் வகையில்

பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து, மகளிர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி வரும் முதல்வருக்கு நன்றியும், பாராட்டும்!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முதலீட்டுக்கு வித்திட்டவர்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் புதிய முதலீட்டிற்கு வழி செய்ததாக முதல்வரை பாராட்டி 9-வது தீர்மானம் நிறைவேற்றம். "

2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வாக்காளர்களுக்கு உறுதி அளித்தபடி, தமிழ் நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியதற்கும்; உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, தமிழகத்தில் 2,42,160 கோடி ரூபாய்க்கான புதிய முதலீட்டிற்கு வழிவகை செய்தமைக்கும், முதல்வருக்கு பாராட்டு" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கலாம் நினைவைப் போற்றிய முதல்வர்'

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவை முதல்வர் போற்றுவதாக பாராட்டி 10-வது தீர்மானம் நிறைவேற்றம். "இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும், தமிழர்களின் பெருமையையும், ஆற்றலையும் இந்த நூற்றாண்டில் உலகறியச் செய்தவருமான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவைப் போற்றி சிறப்புப் பரிசுகளும், பதக்கங்களும் வழங்க ஆணையிட்டிருக்கும் முதல்வருக்கு பாராட்டு" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரித்திரச் சாதனைக்குப் பாராட்டு

நாடாளுமன்ற தேர்தலில் சாதனை படைத்ததாக ஜெயலலிதாவை பாராட்டி 12-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "2014 - நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதிய சரித்திரச் சாதனை படைத்தமைக்கு முதல்வருக்குப் பாராட்டு" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் வாழ்த்தும், புத்தாண்டு வணக்கமும்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து 14-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "கழக நிறுவனத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆரின் கொள்கை வழி நின்று, தமிழ் நாட்டின் வளமும், வளர்ச்சியும் தமது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு

அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தியாகச் சுடராம், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் மற்றும் முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்தும், புத்தாண்டு வணக்கமும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

263 பேருக்கு வீரவணக்கம்!

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 2-வது தீர்மானத்தில், "அதிமுக தலைமைக்கு இன்னல் வந்துற்றபோது, அதனைத் தாங்கிக்கொள்ள இயலாமல் உயிர் நீத்த 263 கழக உடன்பிறப்புகளுக்கு வீரவணக்கம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in