

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங் கினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எலிகளை பிடித்து, அங்குள்ள பாம்புகளுக்கு நேற்று உணவாக அளிக்கப்பட்டது.
கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வஉசி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. தற்போது கரோனா தொற்று பரவலால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பூங்கா வளாகத்தில் உள்ள பறவைகள், விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் சமீப நாட்களாக எலிகள் பெருக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எலிகளை பிடிக்கும் பணி நேற்று நடைபெற்றது. சில இடங்களில் பொறிகள் வைத்தும், ஆழமான பள்ளங்களில் குழாய் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பூங்கா பணியாளர்கள் எலிகளை பிடித்தனர்.
இவ்வாறு 45 எலிகள் பிடிக்கப் பட்டன.
இதுகுறித்து, பூங்கா இயக்குநர் டாக்டர் செந்தில் கூறும்போது, “பூங்கா வளாகத்துக்குள் எலிகள் பெருகி, கட்டிடங் களுக்குள் ஆங்காங்கே குழிகள் பறிக்கின்றன.
விலங்கினங்களுக்கு வைக் கப்படும் உணவுகளை எலிகள் சாப்பிட்டு விடுகின்றன. குடோன் களில் உள்ள உணவுப் பொருட் களையும் சேதப்படுத்தி விடு கின்றன. இதனால் எலிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. பிடிக்கப்பட்ட எலிகள் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள 33 பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்டன. பெரிய அளவு மற்றும் அதிக எடை கொண்ட எலிகள் மலைப் பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்டன” என்றார்.