Last Updated : 01 Jun, 2021 03:12 AM

 

Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

திருமூர்த்திமலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து 25 கி.மீ., தொலைவில்திருமூர்த்திமலை உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான திருமூர்த்தி மலையும், அதன் பஞ்சலிங்க அருவியையும் காண ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 முதலே கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் தடைபட்டது. இதனால்அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வரும்போது அங்குள்ள குரங்குகளுக்கு பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். காடுகளில் குரங்குகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத நிலையில், பல ஆண்டுகளாகவே பக்தர்கள் தரும் உணவை உண்டு பழக்கப்பட்டு விட்ட நூற்றுக்கணக்கான குரங்குகள் அங்கேயே வசிக்கத் தொடங்கி விட்டன. இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் யாரும் வராததால், ஆதரவு கரம் நீட்டுவோர் இல்லாத நிலையில் குரங்குகள் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றன.

இதுகுறித்து சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, ‘பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகையின்றி குரங்குகள் பசியால் வாடுவதை அறிந்து, கடந்த ஆண்டு தன்னார்வர்லர் சிலர் பழ உணவுகளைக் கொடுத்தனர். இது குற்றம் எனக்கூறி வனத்துறையினர் தடுத்துவிட்டனர். இதனால் குரங்குகள் கடந்த ஓராண்டாக போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகள், மனிதனோடு ஒன்றி வாழும் உயிரினமாக உள்ளது. எனவே வனத்துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, குரங்குகள் பசியால் வாடுவதைத் தடுத்து பாதுகாக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து வனத்துறை அலுவலர் தனபால் கூறும்போது, ‘பல ஆண்டுகளாக திருமூர்த்தி மலை அடிவாரத்திலேயே நிரந்தரமாக குரங்குகள் தங்கி விட்டன. பக்தர்கள் வருகை இல்லாதது உண்மைதான். ஆனால் பசியால் இதுவரை இறப்பு என்ற நிலை இல்லை. தொடர்ந்து அவற்றை கண்காணித்து வருகிறோம். குரங்குகளுக்கு உதவ முன் வரும் தன்னார்வலர்கள் வனத்துறையை அணுகினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x