Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

சென்னையில் நடமாடும் மளிகை வாகன சேவை: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு தொடங்கிவைத்தனர்

சென்னை

சென்னையில் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை வாகன சேவையை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி, வணிகர் சங்கங்களுடன் இணைந்து, பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடமாடும் மளிகை வாகன சேவையை பட்டாளம் பகுதியில் உள்ள மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமம் பெற்ற 7,500-க்கும் மேற்பட்ட மளிகைப் பொருள் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களின் வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் வில்லைகள், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் தொடர்புடைய வார்டு அலுவலகங்களில் வரி வசூலிப்பாளர் மூலம் வழங்கும் பணி மே 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 ஆயிரத்து 197 விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/groceries/ என்ற இணையதளம் மற்றும் `நம்ம சென்னை' செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ-க்கள் தாயகம் கவி, இ.பரந்தாமன், மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையர் என்.தர், துணை ஆணையர் விஷு மகாஜன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x