Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கைகளுடன் கரோனா மையங்கள்: தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் வழங்கியது

தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், அரசு ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளுக்கு தலா 100 படுக்கை வசதிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மையங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரும்பு மற்றும் ஸ்டீல் வியாபாரிகள் சங்கமான தமிழ்நாடு ஸ்பாட் பரிஷத் நிறுவனம் சார்பில், கரோனா பரவல் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள உமேஷ் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் உள்ள சங்கச் செயலர் பங்கஜ் அகர்வால், நிர்வாகிகள் உமேஷ் அகர்வால், பி.எஸ்.ஹரி, ராஜேஷ் மிட்டல், ராதே கோயல், பால் கோவிந்த் குப்தா ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குளிர்சாதன வசதியுடன், தலா 100 படுக்கைகளைக் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க அயராது உழைத்தனர். அவற்றில் தலா 50 படுக்கைகள் ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையத்தை கடந்த 27-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தற்காலிக சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு அம்மையம் வழங்கப்பட உள்ளது.

சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், சக்கர நாற்காலிகள், நோயாளிகளைக் கொண்டு செல்வதற்கான சக்கர படுக்கை ஆகியவையும் நன்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது.

இஎஸ்ஐ மருத்துவமனை கேட்டுக்கொண்டதன் பேரில், உடனடியாக 5 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசுஓமந்தூரார் மருத்துவமனைக்கு 50 சக்கர நாற்காலிகள் மற்றும் 100 சக்கர படுக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.

சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் கபில்குமார் மகேஸ்வரி, அசோக்குமார் ரதி ஆகியோர், சங்க உறுப்பினர்களை ஊக்கப்படுத்தி, அதிக அளவில் நன்கொடைகள் மற்றும் உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்தனர்.

சங்கத் தலைவர் தினேஷ் சேத்தி கூறும்போது ``தற்போது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ள பணிகள், இந்த சங்கத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை'' என்றார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x