

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று காரணமாக மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையிலும், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், கடந்த 2020-ம் ஆண்டு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்காக இந்தாண்டு பிப்ரவரி 28-ம் தேதி ரூ.682.70 கோடி நிதிஒதுக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட அன்றேஇந்திய தேர்தல் ஆணையம், சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று 24 நாட்கள் முடிவடைந்துள்ள சூழலிலும், ஓய்வூதியப் பயன்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களை சென்றடையவில்லை. இதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றன.
ஓய்வூதிய பலன்கள் என்பது ஊதியத்தின் ஒரு பகுதி என்பதன்அடிப்படையில் ஏற்கெனவே நிதிஒதுக்கி ஆணை வெளியிடப்பட்டதை கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றுமுதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.