

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நான்கு கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. 7 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் 4 மணி நேரம் போராடி அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை பிரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பூனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (30). இவரது மனைவி லட்சுமி (24). கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் வயிற்றுப் பகுதியில் கூடுதலாக இரண்டு கை, கால்கள் இருந்தன. இதையடுத்து 27-ம் தேதி உயர் சிகிச்சைக்காக குழந்தை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், கருவில் இரட்டை குழந்தைகளாக உருவாக வேண்டியதில் ஒரு குழந்தை வளர்ச்சி அடையாமல் இருந்திருப்பது தெரியவந்தது. மேலும் ஒட்டியுள்ள இரண்டாவது குழந்தையின் தலை, இதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வளர்ச்சி அடையாமலும், இடுப்பு பகுதி, சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட உறுப்புகள் மட்டும் வளர்ச்சி அடைந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு கை, கால்களுடன் இருந்த வளர்ச்சி அடையாத குழந்தையை பிரிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்கான சாத்தியக்கூறுகள், பரிசோதனைகள், அறுவைச் சிகிச்சை செய்யும் முறை போன்றவற்றில் கடந்த ஒரு வாரமாக டாக்டர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை டாக்டர்கள் செந்தில்நாதன், ஸ்ரீனிவாசராஜ் தலைமையில் டாக்டர்கள் கற்பக விநாயகம், பாலசுப்பிரமணியம், கிருஷ்ணன், மைக்கல் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் இரண்டு கை, கால்களுடன் வளர்ச்சி அடையாத குழந்தையை வெற்றிகரமாக பிரித்து தனியே எடுத்தனர். குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, “4 மணி நேரம் போராடி அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றிவிட்டோம். குழந்தைக்கு இதயம், வயிற்றுப் பகுதியில் பிரச்சினை இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றனர்.