அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கே.எஸ்.தஸ்தகீர்
கே.எஸ்.தஸ்தகீர்
Updated on
1 min read

அமைச்சர் செஞ்சி மஸ்தான் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் உடல் நலக்குறைவால் உயிரிழந் துள்ளார். அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தள்ளார்.

தஸ்தகீருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் கரோனா தொற்று ஏற்பட்டது. அதில் குணமடைந்து, இயல்பான நிலையில் இருந்து வந்தார். இதற்கிடையே மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். அன்று மாலை செஞ்சி, கிருஷ்ணாபுரத்தில் உள்ள கபர்ஸ்தானில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘கரோனா தொற்று முன்தடுப்பு நடவடிக்கையாக யாரும் நேரில் அஞ்சலி செலுத்த வர வேண்டாம்’ என அமைச்சர் மஸ்தான் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று யாரும் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.

சகோதரர் மறைவைத் தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில்,“சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சகோதரர் கே.எஸ்.தஸ்தகீர் (45) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உடன் பிறந்தவரை இழந்து தவிக்கும் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுக்கு எனது ஆறுதலையும், தஸ்தகீர் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விழுப்புரம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோரும் இரங்கல் செய்தியை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுக்கு அனுப்பி, தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in