

செல்போன் பழுது, பிளம்பர், மின்பழுது பார்ப்போர் வீடுகளுக்கு சென்று சேவை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடைகளை திறக்க அனுமதியில்லை.
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 24-ம்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து வணிக நிறுவனங்கள், மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இன்று முதல் அமல்
இந்நிலையில் மே 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட புதிய பொதுமுடக்க கட்டுப்பாடு விதிமுறைகளை புதுச்சேரி அரசு நேற்று வெளியிட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் தளர்வு களுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. இதர கடைகள் அனைத்தும் மூடப்படும். வழக்கம்போல் பேருந்துகள் இயங்காது.
மேலும், புதிய தளர்வாக மின்சாரம், குடிநீர் குழாய், வாகனங்கள் பழுது மற்றும் செல்போன் பழுது நீக்குதல் போன்ற அடிப்படை சேவைகளை சுய தொழிலாக செய்பவர்கள், மேற்கண்ட சேவைகள் தேவைப் படுபவர்களின் வீடுகளுக்கு சென்று மட்டும் சேவைகள் வழங்கஅனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கடைகளை திறக்க அனுமதி இல்லை.
அதேபோல் மின்னணு மற்றும் மின்சாதன உதிரிபாகங்கள், செல்போன் மற்றும் இருசக்கர உதிரிபாகங்கள் கடை வைத்திருப்பவர்கள், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்க புதுச்சேரி அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மதுக்கடைகளை மூட உத்தரவு
இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் ஊரடங்கை வலுப்படுத்தும் வகையில் மாநில செயற்குழு வழங்கியுள்ள வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள், எப்எல்1, எப்எல்2 மற்றும் எப்எல்2 சுற்றுலா உரிமம் பெற்ற கடைகள் என அனைத்து விதமான மதுக்கடைகளும் வரும் 7-ம் தேதி நள்ளிரவு வரை முழுமையாக மூட வேண்டும்.
இந்த உத்தரவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, விதிகளை மீறினால் கலால்துறை சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தெரிவித்துள்ளார்.