

மயிலாடுதுறை அருகே கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், உயிரிழந்தவர்களில் ஒருவர் யூ டியூப் பார்த்து தயாரித்த போதை பொருளே இறப்புக்கு காரணம் என மயிலாடுதுறை எஸ்.பி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையை அடுத்த சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு(33), அச்சகத் தொழிலாளி. அம்மாசி மகன் செல்வம்(36), சுமைதூக்கும் தொழிலாளி. இவர்கள் உட்பட அதே பகுதியைச் சேர்ந்த சிலர், பிரபு வைத்திருந்த போதைப் பொருளை அருந்தியுள்ளனர். அதன்பின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிரபு, செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரபு, செல்வம் உயிரிழப்புக்கும் மற்றவர்கள் பாதிக்கப்பட்டதற்கும் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததே காரணம் எனக் கூறப்பட்டதால், அது குறித்து விசாரிக்க மயிலாடுதுறை எஸ்.பி நாதா உத்தரவின்பேரில், 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி நாதா செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: இறந்துபோன பிரபு ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்துள்ளார். கரோனா ஊரடங்கால் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார். போதைக்கு அடிமையான இவர், யூ டியூப்பை பார்த்து கெமிக்கலை சாராயமாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொண்டு, மீத்தைல் ஆல்கஹால் போன்ற கெமிக்கலை வாங்கி, அதில் எலுமிச்சை மற்றும் பல்வேறு பொருட்களை கலந்து ஒரு போதை பொருளை தயாரித்துள்ளார். அதை பிரபுவும், செல்வமும் குடித்துள்ளனர். மறுநாள் அதை அப்பகுதியில் உள்ள பலருக்கு விற்றுள்ளனர். இந்தப் போதைப்பொருள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதனால், போதை பொருளை அதிகம் அருந்திய பிரபு, செல்வம் இருவரும் உயிரிழந்துள்ளனர். குறைவாக குடித்த மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தின்றி தப்பித்து விட்டனர்.
இவர்கள் பயன்படுத்திய கெமிக்கல் தடை செய்யப்பட்டதா? யாருடைய அனுமதியுடன் வாங்கப்பட்டது? இந்த சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கெமிக்கல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்ததும் மேலும் விவரங்கள் தெரிய வரும் என்றார்.