

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு கல்லூரி மாணவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
கரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், பலரும் பல விதங்களில் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளை உடனிருந்து கவனிக்கின்றனர். தன்னார்வமாக கடந்த 20 நாட்களாக ஷிப்ட் அடிப்படையில் அங்கு மாணவர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து இந்த சேவையை ஒருங்கிணைத்து செய்துவரும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜாய்சன் கூறியதாவது: “கரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ இந்திய மாணவர் சங்கம் தயாராக இருக்கிறது. எங்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என, மாவட்ட ஆட்சியருக்கு இம்மாதம் 5-ம் தேதி தகவல் கொடுத்தோம். ஆட்சியர் மே 7-ம் தேதி எங்களை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேவை செய்ய அழைத்தார். தொடர்ந்து மருத்துவமனை டீனை சந்தித்து பேசி எங்களுக்கான பணிகளை முடிவு செய்தோம்.
தற்போது 31 மாணவர்கள் இந்த சேவையில் இருக்கிறோம். கரோனா தடுப்பூசி போடுவோரின் விவரங்களை கணினியில் பதிவுசெய்தல், கரோனா பரிசோதனை செய்ய வருவோரின் விவரங்களை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்தல், பரிசோதனை முடிவுகளை பதிவேற்றம் செய்தல், மருத்துவமனையில் உள்ள கரோனா உதவி மையத்தில் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு வழிகாட்டுதல், கட்டுப்பாட்டு அறையில் இருந்து கரோனா நோயாளிகளின் நிலவரங்களை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளை செய்கிறோம்.
இதைத்தவிர கரோனா வார்டில் 13 பேர் பணியாற்றுகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல், நோயாளிகளின் நிலையை உறவினர்களுக்கு தெரிவித்தல் போன்ற பணிகளைச் செய்கின்றனர். கரோனா படுக்கை விவரங்களை தினமும் மூன்று முறை சேகரித்து, அட்மிஷன் போடும் பிரிவுக்கு தகவல் தெரிவிப்போம். அதன் அடிப்படையில் படுக்கை ஒதுக்கீடு நடைபெறும்.
முழு கவச உடை அணிந்து பணி செய்கிறோம். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை 28 பேர், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 3 பேர் என, இரண்டு ஷிப்ட்களாக பணி செய்கிறோம். இதற்காக முதலில் நாங்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டோம். பணி செய்துவிட்டு வீட்டுக்கு சென்றதும் எங்களை தனிமைப்படுத்திக் கொள்வோம். கடந்த 5 நாட்களாக காய்கறி தொகுப்பு பைகளில் காய்கறிகளை எடை போட்டு நிரப்பும் பணியிலும் 10 மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.